பைக் ரிப்பேர் பார்க்க வேண்டும் என செல்போனில் அழைத்து மெக்கானிக்கை இரும்பு ராடால் தாக்கிவிட்டு தலைமறைவான 2 பைக் ஆசாமிகளை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் இந்துவித்யாலயா பள்ளி தெருவை சேர்ந்தவர் ஹரிஷ்குமார் (23). இவரது சொந்த ஊர் உத்தரபிரதேசம் ஆகும். இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சிப்காட் வந்து வஉசி நகரில் பைக் பழுது பார்க்கும் கடையை வைத்து நடத்திவந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் இரண்டு மர்ம நபர்கள் ஹரிஷ்குமாரின் செல் நம்பருக்கு போன் செய்து எங்கள் வாகனம் சிப்காட் தனியார் பெட்ரோல் பங்க் எதிரில் பழுதாகி நிற்கிறது. உடனடியாக பைக்கை ரிப்பேர் செய்து கொடு என அழைத்தனர்.
சம்பவ இடத்திற்கு ஹரிஷ்குமார் விரைந்து வந்தார். அப்போது மேற்கண்ட 2 மர்ம நபர்கள் பைக் மெக்கானிக் ஹரிஷ்குமாரை தாங்கள் பின்னால் மறைத்து வைத்திருந்த இரும்பு ராடால் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் பலத்த காயம் அடைந்து துடித்துக் கொண்டிருந்த பைக் மெக்கானிக்கைக்கண்ட சிலர் உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை பெற்றுக்கொண்டு பின்னர் தீவிர சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சிப்காட் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் ஜான்சேவியர் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய 2 மர்ம ஆசாமிகளுகளை வலைவீசி தேடி வருகின்றனர்.