ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேபோல், ஆந்திர மாநிலத்திலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வேலூர் மாவட்டம், பொன்னை ஆற்றில் நேற்று காலை முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
எனவே, பொன்னை அணைக்கட்டில் வெள்ளம் கடந்து செல்வதால் கால்வாய்கள் திறக்கப்பட்டு, வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் திருப்பிவிடப்பட்டது. தொடர்ந்து, மேல்பாடி, இளையநல்லூர், வசூர், குமணந்தாங்கல் ஆகிய ஏரிகள் கிடு, கிடுவென நிரம்பி வருகிறது. இதனால், அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் மேலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பொன்னை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் தயார்நிலையில் இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.