நீட் தேர்வுக்கான முடிவுகள் நேற்று முன்தினம் இரவு வெளியானது. இதில் தமிழகத்தில் 67 ஆயிரத்து 787 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

இதில் வேலூர் மாவட்டம் பொன்னை அருகே தீயார் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் விநாயகம் கூலி தொழிலாளி. இவரது மகன் வசந்தகுமார் (17). 

இவர் கடந்தாண்டு பொன்னை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ம் பொதுத்தேர்வில் 565 மதிப்பெண் எடுத்து பள்ளியளவில் 2ம் இடம் பிடித்து தேர்ச்சி பெற்றார். கடந்த மாதம் நடந்த நீட் தேர்வை வசந்தகுமாரும் எழுதினார்.

நீட் தேர்வு முடிவில் வசந்தகுமார், 133 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். முதல் முறையாக நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளி ஆசிரியர்கள் மாணவனை வாழ்த்தினர். 

மேலும், வசந்தகுமார் அண்ணா யூனிவர்சிட்டி பொறியியல் பட்டப்படிப்பில் நுழைவுத் தேர்வில் 200க்கு 190 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். 

இதுகுறித்து மாணவன் வசந்தகுமார் கூறுகையில், 'மருத்துவ படிப்பு என்பது சிறு வயது முதல் தான் கனவு என்றும் தற்போது நீட் தேர்வில் பயிற்சி பெறாமல் எழுதி வெற்றி பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் மருத்துவ படிப்பு முடித்து ஏழைகளுக்கு இலவச மருத்துவம் பார்ப்பது வாழ்நாள் லட்சியம்' என்றார். 

நீட் தேர்வில் பயிற்சி பெறாமல் வேலூர் மாவட்டத்தில் முதல் முயற்சியில் வசந்தகுமார் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.