Fast for Perumal in the month of Puratasi.. Mahalakshmi's mind will cool down.. Wealth will increase!

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம். பண்டிகைகள் நிறைந்த புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமை மட்டுமின்றி திங்கள், புதன்கிழமையும் பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த நாட்களாகும். இந்த விரத வழிபாடுகள் மகாலட்சுமியை மகிழ்ச்சி அடையச் செய்யும். அன்னை மகாலட்சுமியின் அருளால் நம் வீட்டில் செல்வ வளம் பெருகும். 

புரட்டாசி மாதம் ராசிச் சக்கரத்தின் கன்னி மாதத்தில் வருகிறது இது கன்னி மாதம். கன்னி மூலையில் அமைந்திருக்கும் விநாயகரை வழிபடுவது கூடுதல் பலன்களைத் தரும். புரட்டாசி மாதம் முன்னோர்கள் வழிபாடு, இறை வழிபாடு, சக்தி வழிபாடு என அனைத்து அம்சங்களையும் அடக்கியிருக்கிறது என்பதே.

புண்ணியம் மிக்க புரட்டாசி மாதத்தில் விரதங்கள் கடைபிடித்தால் அதிகம் புண்ணியம் கிடைக்கும். மகாலெட்சுமி விரதம், தசாவதார விரதம், கதளி கவுரிவிரதம், அநந்த விரதம், பிரதமை, நவராத்திரி பிரதமை, ஷஷ்டி, லலிதா விரதம் போன்றவை விசேஷமானவை. பித்ருக்களை வழிபடும் மகாளயம், பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் நவராத்திரி இவையும் சேர்ந்து புரட்டாசிக்குப் பெருமை சேர்க்கிறது. கடவுளுக்கு காணிக்கை மற்றும் நேர்த்திக்கடன்கள் செலுத்த புரட்டாசி மாதமே சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது.

நவராத்திரி பண்டிகை விரதம் புரட்டாசி மாதம் அதிக வழிபாடுகள் நடத்த வேண்டிய மாதமாகும். அம்மன் வழிபாட்டிற்கு உகந்த நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுவதும் இந்த மாதத்தில்தான் புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் பிரதமை தொடங்கி தசமி வரை பத்து நாட்களும் விரதம் இருந்து அம்மனை வணங்குவதன் மூலம் அருளோடு பொருளும், தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

உடல் வலிமை அதிகரிக்கும் விநாயகர் விரதம் புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியில் சித்தி விநாயக விரதம் இருந்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை இல்லாமல் போய் விடும். புரட்டாசி மாதம் சங்கட ஹர சதுர்த்தி தினத்தன்று விநாயகரை நினைத்து விரதம் கடைபிடித்தால் சுகபோக வாழ்வு கிடைக்கும். புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமி தினம் முதல் ஓராண்டுக்கு விநாயகருக்கு அருகம்புல் சார்த்தி அர்ச்சனை செய்து வழிபட்டால் உடல் வலிமை உண்டாகும்.

எமபயம் போக்கும் விரதம் ஜாதக அமைப்பின்படி சனி, புதன் திசை நடப்பவர்கள் நல்லெண்ணெய் தீபம் போட்டு வழிபட தடைகள் அனைத்தும் நீங்கும். பாவங்கள் நீங்கி புண்ணியமும் சுபயோக சுபங்களும் கூடி வரும். எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காக்கும் கடவுளான விஷ்ணுவை வணங்க வேண்டும்.

புரட்டாசி பவுர்ணமி விரதம் புரட்டாசி மாதம் பவுர்ணமி தினத்தன்று லட்சுமியை இந்திரன் வணங்குவதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அன்று வலம்புரி சங்கில் பசும்பால் ஊற்றி மலர்களால், அலங்கரித்து வழிபட்டால் சகல செல்வங்களும் வந்து சேரும். புரட்டாசி பவுர்ணமி தினத்தன்று அம்பாளுக்கு 4 வண்ணங்களில் ஆடையும் ரத்தினக்கல் ஆபரணமும் அணிவித்து வழிபட வேண்டும். அன்று அம்பாளுக்கு நைவேத்தியமாக இளநீர் படைக்க வேண்டும். இந்த பூஜையால் குடும்பத்துக்கு தேவையான செல்வங்கள் வந்து சேரும் என்பது ஐதீகம்.

மனம் குளிரும் மகாலட்சுமி புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த மாதம் சனிக்கிழமை பெருமாளுக்கு விரதம் இருந்து மாலையில் படையல் போட்டு மாவிளக்கு ஏற்றி வழிபட்டால் பெருமாளின் அருள் நிச்சயம் கிடைக்கும். 

பெருமாள் படத்தின் முன்பாக வாழை இலையில் புளி சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், வடை, சுண்டல், பாயாசம் படைக்கலாம். பூஜையில் துளசி தீர்த்தம் கட்டாயம் இருக்க வேண்டும். மாவிளக்கு போட வேண்டும். வழக்கம் போல் தேங்காய் உடைத்து சாமிக்கு பூஜை செய்யும் போது வீட்டில் இருக்கும் அனைவரும் கோவிந்தா நாமத்தை உச்சரிக்க வேண்டும். 

சாமி கும்பிட்டு முடித்த பின்னர் அனைவரும் சாப்பிட வேண்டும். அக்கம் பக்கத்தினருக்கு அன்னதானம் அளிக்கலாம். விரதம் முடிந்தவுடன் மாலை பெருமாள் கோயிலுக்கு கட்டாயம் சென்று வர வேண்டும். புரட்டாசி சனிக்கிழமைகளில் இப்படி விரதம் இருந்து பெருமாளை வணங்கினால் அன்னை மகாலட்சுமியின் அருளால் நம்முடைய செல்வ வளம் பெருகும்.