ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்த சர்வந்தங்கல் கிராமத்தை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி தரணி (வயது 27). இவர் தனது உறவினர் நரசிம்மன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ஆற்காடு சென்றுள்ளார்.
பின்னர் மீண்டும் அவர்கள் கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். அப்போது சிறிது தூரம் சென்றவுடன் கையில் வைத்திருந்த பையை காணவில்லை. அதில் 4 பவுன் நகைகள் மற்றும் செல்போன் இருந்தது.
உடனடியாக இதுகுறித்து தரணி ஆற்காடு டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை செய்தனர். அப்போது தொலைந்த செல்போன் நம்பருக்கு போன் செய்தபோது ஆற்காட்டை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாஷா (58) என்பவர் பெண் தவறவிட்ட 4 பவுன் நகைகள் மற்றும் செல்போன் உள்ளதாகவும், அதனை போலீஸ் நிலையத்தில் எடுத்து வந்து ஒப்படைப்பதாக கூறினார். அதன்படி சிறிது நேரத்திலேயே போலீஸ் நிலையம் வந்து ஒப்படைத்தார்.
அதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி மற்றும் போலீசார் அதனை உரிய நபரிடம் ஒப்படைத்தனர். நேர்மையாக நடந்து கொண்ட ஆட்டோ டிரைவர் பாஷாவை பாராட்டி பரிசு வழங்கினர்.