ராணிப்பேட்டையில், குரோமிய மாசால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீட்டெடுக்க, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், சிட்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் செயல்பட்ட குரோமேட்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் தொழிற்சாலை 1995ல் மூடப் பட்டது. இந்த தொழிற்சாலை வளாகத்தில், குரோமிய கழிவுகள் குவிந்து கிடக்கிறது. இதனாலும், ராணிப்பேட்டையில் பல்வேறு ஆலைகளால் மாசு ஏற்படுவது பற்றி, 2020-ல் நாளிதழ்களில் செய்தி வெளியானது. அதன் அடிப்படையில், தென்மண்டல பசுமை தீர்ப்பாயம், தாமாக முன்வந்து வழக்கு பதிந்து, விசாரித்தது. தீர்ப்பாய உத்தரவுப்படி அமைக்கப்பட்ட கூட்டுக்குழுவும், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியமும், இது தொடர்பாக அறிக்கை சமர்பித்தன.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாய நீதிபதி கே.ராமகிருஷ்ணன், நிபுணர்குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: குரோமியம் புற்றுநோயை உண்டாக்கும் அளவுக்கு அபாயகரமானது என்பதால், ராணிப்பேட்டை சிப்காட் வளாகத்தில் உள்ள குரோமியம் கழிவுகளை, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பின்றி அகற்ற, இறுதி தீர்வு காணும் நடவடிக்கைகளை, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவிக்க வேண்டும்.
குரோமியம் கழிவுகளால் ஏற்பட்ட மாசுபாட்டை சரிசெய்யாவிட்டால், அப்பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்க முடியாது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழங்கிய வழிகாட்டுதல்களின் அடிப்படையில், குரோமியம் கழிவுகளால் மாசுபட்ட இடங்களை மீட்டெடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம், விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் விசாரணை வரும் 31-ம் தேதி நடைபெறும். இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.