திருவலம் அருகே வாலிபரின் தீக்குளிப்புக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுத்து, பணி நீக்கம் செய்யக் கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்டம், திருவலம் அருகே உள்ள குகையநல்லூர் காலனி பகுதியை சேர்ந்தவர் சரத் (வயது 26). அறுவடை எந்திரம் வைத்து தொழில் செய்து வந்தார். மேல்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி என்பவர் தன்னை அடிக்கடி மிரட்டுவதாக கூறி, கடந்த 11-ந் தேதி மேல்பாடி போலீஸ் நிலையம் அருகே பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் படுகாயமடைந்த அவர் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து மேல்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற வாலிபர் சரத்தின் உறவினர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சரத் தீக்குளித்ததற்கு காரணமான சப்- இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், அவர்களை பணிநீக்கம் செய்யவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருவலம்- பொன்னை சாலையில், குகையநல்லூர் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதே போல் மேல்பாடி போலீஸ் நிலையம் அருகிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
குகையநல்லூர் அருகே சாலை மறியலில் ஈடுபட்டவர்களை திருவலம் போலீசார் சமாதானம் செய்தனர். மேலும் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணா சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். தீக்குளிப்புக்கு காரணமானவர்கள் மீது விசாரணை நடத்தி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இந்த திடீர் சாலை மறியல் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.