கலவை அருகே உள்ள கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் மகன் அருண்குமார் (24). அதே பகுதியை சேர்ந்தவர் பச்சையப்பன் மகன் செந்தில்குமார் (25). இவர்கள் இருவரும் அதே பகுதியில் பதனீர் இறக்கும் தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது. நேற்று காலை வாலாஜா கலால் காவல் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப்-இன்ஸ் பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அனுமதி இல்லாமல் தினசரி பதனீரை சென்னைக்கு விற்பனைக்கு அனுப்பியது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தமிழ்நாடு பனை ஏறிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாண்டியன், தலைமையில், சட்ட ஆலோசகர்கள் தீபன், ஐயப்பன் ஆகியோர் முன்னிலையில் பனை ஏறுபவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து கன்னிகாபுரம் கூட்ரோடு பகுதி ஆரணி செய்யாறு சாலையில் கள் இறக்கும் தொழிலாளர்கள், பொதுமக்கள், சிறுவர்கள் என 100க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த கலவை இன்ஸ்பெக்டர் மங்கையர் கரசி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள் காவல்துறையினர் பொய் வழக்கை போடக்கூடாது. கைது செய்தவர்களை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அப்போது கலவை இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, இதுகுறித்து அதிகாரியிடம் தெரிவித்து நாளை பதில் கூறுகிறேன் என்றும், இப்பகுதி வழியாக மருத்துவமனைக்கு. வேலைக்குச் செல்பவர்கள். பொதுமக்கள் வீட்டிற்கு செல்வது சிரமமாக உள்ளது. எனவே சாலை மறியலை கைவிடுமாறு கூறினார். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.