ஆற்காடு அருகே பொதுவழியில் தடுப்பு ஏற்படுத்தியதை கண்டித்து கிராம மக்கள் நேற்று காலை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமரசப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த தாழனூரில்உள்ள மேட்டுத்தெரு பகுதி வழியாக ஒரு பாதை உள்ளது.

அந்த இடத்தை ஒருவர் ஊராட்சி நிர்வாகத்திற்கு தானமாக கொடுத்ததாக கூறப்படுகிறது. அதன் பேரில் கடந்த 20 ஆண்டுகளாக அந்த பாதை வழியாக மயானத்திற்கு செல்வதற்கும், அருகில் உள்ள கிராமங்களுக்கு செல்வதற்கும் பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். மேலும் ஊராட்சி நிர்வாகமும் அந்த பகுதியில் தெருவிளக்கு, குடிநீர் குழாய் பைப்லைன்கள் உள்ளிட்டவை அமைத்ததாக தெரிகிறது.

இந்நிலையில் மேற்கண்ட வழி தனக்கு சொந்தமென்று அந்த பாதை வழியாக யாரும் செல்லாத வகையில் தனியார் ஒருவர், சில வாரங்களுக்கு முன்பு திடீரென தடுப்பு ஏற்படுத்தியுள்ளார். இது தொடர்பாக பொதுமக்கள் தட்டிக்கேட்டனர். நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் உடல்நலம் சரியில்லாத காரணத்தால் இறந்தார். அவரது இறுதிச்சடங்கு நேற்று முன்தினம் மாலை நடத்துவதற்கு ஏதுவாக பொது வழிப்பாதையில் இருந்த தடுப்புகளை அகற்றும்படி தனிநபரிடம் கிராம மக்கள் கேட்டனர், ஆனால் அந்த நபர் அகற்ற மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று காலை தாழனூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இது குறித்து தகவலறிந்த ஆற்காடு டவுன் எஸ்.ஐ பாஸ்கரன், தனிப் பிரிவு எஸ்ஐ விநாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பிரச்னை தொடர்பாக பேசி தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறினர். இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவ ரத்து பாதிக்கப்பட்டது.