மாசி மாதம் கிருஷ்ண பக்ஷத்தின் ஏகாதசி விஜய ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இந்த முறை விஜய ஏகாதசி பிப்ரவரி 27, ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது. 

விஜயம் என்றால் வெற்றி. கடினமான சூழலில் போராட்டமான வாழ்க்கையில் இருப்பவர்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய ஏகாதசி விஜயா ஏகாதசி. இந்த ஏகாதசி விரதத்தை ராமபிரானே கடைப்பிடித்ததாக ஐதிகம்.ராமச்சந்திர மூர்த்தி மனிதர்களுக்கு உதாரண புருஷராக வாழ்ந்துகாட்டியவர். மனிதர்கள் தங்கள் பாவங்கள் தீர வாழ்வில் வெற்றிபெற மேற்கொள்ள வேண்டிய வழிபாடுகளைத் தன் வாழ்வில் செய்துகாட்டியவர். அப்படி அவர் மேற்கொண்ட விரதங்களில் ஒன்று விஜயா ஏகாதசி. 

ராவணனுடன் போரிட இலங்கை செல்லும் முன்பு அந்தப் போரில் வெல்ல என்ன செய்ய வேண்டும் என்று வக்தால்ப்ய ரிஷியிடம் கேட்டார் ராமர். அதற்கு அந்த ரிஷியும் விஜயா ஏகாதசி விரத மகிமைகளை எடுத்துச்சொல்லி அதை மேற்கொள்பவர்களுக்கு வெற்றி நிச்சயம் என்பதை விளக்கினார். ராம பிரானும் தவறாமல் அந்த விரதத்தைக் கடைப்பிடித்து அதன் பலனை அடைந்தார் என்கிறது புராணம்.விஜயா ஏகாதசி நாளில் உபவாசம் இருந்து வழிபடுவது சிறந்தது. உப - வாசம் என்றால் அருகில் வசிப்பது என்று பொருள். இரையைத் தவிர்த்து இறைச் சிந்தனையில் மூழ்கியிருந்தால் அந்த இறைவன் நம் அருகில் வாசம் செய்வான் என்பது பொருள். எனவே முடிந்தவர்கள் முழு பட்டினி கிடந்து விரதம் மேற்கொள்வது பயன்தரும். துளசி தீர்த்தம் மட்டும் அருந்தலாம். இயலாதவர்கள் முழு அரிசிச் சோற்றைத் தவிர்ப்பது நல்லது.அதுவும் முடியாதவர்கள் தவறாமல் இறைவனின் நாமத்தை உச்சரித்துக்கொண்டிருப்பது நல்லது. விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களை உரைக்கும் சகஸ்ர நாமத்தை இந்த நாளில் கேட்பது பயன்தரும். குறைந்தபட்சம் இன்று கட்டாயம் ஆலயம் சென்று பெருமாளை வழிபட்டு அங்கு அமர்ந்து விஷ்ணு சகஸ்ர நாமப் பாராயணம் செய்து வழிபடுவதன் மூலம் விஜயா ஏகாதசி விரதத்தின் பலனை முழுமையாகப் பெறலாம்