நவீன இயந்திரத்தின் மூலம் கரும்பு அறுவடை செய்வது குறித்த செயல்விளக்க முகாமை தொடக்கி வைத்த அமைச்சா் ஆா்.காந்தி.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரை அடுத்த கரடிகுப்பத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நவீன இயந்திரம் மூலம் கரும்பு அறுவடை செயல்விளக்க முகாமினை தொடக்கி வைத்து தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி பேசியது:
கரும்பு உற்பத்தி தற்போது குறைந்து வருகிறது. தண்ணீா் இருந்தாலும் கரும்பு அறுவடை செய்வதற்கான கூலி ஆட்கள் கிடைப்பதில் பெரும் சிரமம் உள்ளது. அதிக கூலியும் வழங்கப்பட வேண்டியுள்ளது. இதனால் கரும்பு விவசாயத்தில் லாபம் கிடைப்பதில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.
வேலூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் மின் உற்பத்தி நிலையம் அமைத்து தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஆலை எனும் பெயரை பெற்றுள்ளது.
இந்த ஆலை 5 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி திறன் கொண்டது. ஆனால் தற்போது 1.5 டன் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் விவசாயிகள் கரும்பு உற்பத்தியில் அதிகளவில் ஈடுபட வேண்டும். நவீன அறுவடை இயந்திரங்களை பயன்படுத்தி பயனடைய வேண்டும். சா்க்கரை ஆலைகளில் விவசாயிகளுக்கு நிலுவை இல்லாமல் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நடப்பாண்டில் சா்க்கரை கட்டுமானம் 9.77 சதவீதமும் சா்க்கரை உற்பத்தி அளவு 36,610 குவிண்டாலாக உள்ளது.
கரும்பு சாகுபடி பரப்பினை அதிகரிக்கவும் கரும்பு சாகுபடியில் விவசாயிகளை ஊக்குவிக்கவும் கரும்பு உற்பத்தி அபிவிருத்தி பணிகளுக்காக மானியம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே கரும்பு விவசாயிகள் நவீன இயந்திரங்களை பயன்படுத்தி கரும்பு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். அதிக லாபம் அடையும் வகையில் கரும்பு உற்பத்தி இருக்க வேண்டும் என்றாா் அமைச்சா் ஆா்.காந்தி.
விழாவில் விவசாயிகள் ஏழு பேருக்கு கரும்பு கொள்முதல் தொகை ரூ.11 லட்சத்துக்கான காசோலைகளை அமைச்சா் காந்தி வழங்கினாா்.
முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் தலைமை வகித்தாா். இதில் வேலூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநா் மலா்விழி, சா்க்கரை ஆலை தலைவா் ஆனந்தன், சோளிங்கா் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் கலைக்குமாா், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் எஸ்.எம்.நாகராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.