ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், நெமிலி, காவேரிப்பாக்கம், சோளிங்கர்,வாலாஜா, ஆற்காடு, திமிரி ஆகிய 7 ஒன்றியங்கள் உள்ளது. இங்கு, 288 கிராம ஊராட்சிகள் உள்ளது. இந்நிலையில், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் தலா 2,06,570 மதிப்பீட்டில் புதியதாக வீடுகள் கட்டப்பட உள்ளது. 

இதைத்தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் 4459 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, வீடுகள் கட்டுவதற்கு ஒன்றிய நிர்வாகம் மூலம் பணி ஆணைகள் வழங்கப்பட்டது. இதையடுத்து, ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின் பேரில், மாவட்ட ஊரக வளர்ச்சிதிட்ட இயக்குனர் லோகநாயகி மேற்பார்வை யில் நேற்று ஒரே நாளில் 2377 பயனாளிகள் புதிய வீடுகள் கட்டுவதற்கான பூமி பூஜை போட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதன்படி, அரக்கோணம் ஒன்றியத்தில் உள்ள 42கிராம ஊராட்சிகளிலும் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான பூமி பூஜை போடப்பட்டது. இப்பணியை மாவட்ட உதவி திட்ட அலுவலர் சுவாமிநாதன், பிடிஓக்கள் செல்வகுமார், குமார் ஆகி யோர் கலந்து கொண்டு பார்வையிட்டு, வீடுகளை விரைந்து கட்டி முடிக்க பயனாளிகளுக்கு அறிவுறுத்தினர்.