ராணிப்பேட்டை அண்ணா அவென்யூ பகுதியில் வசிப்பவர் எஸ்.எம்.சுகுமார். தொழிலதிபரான இவர் அ.தி.மு.க.வில் மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளராக பதவி வகித்து வருகிறார். இவர் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.
இவர் கடந்த 29-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் சென்னை சென்றிருந்தார். இந்தநிலையில் நேற்று ராணிப்பேட்டையில் உள்ள இவரது வீட்டை அவரது வேலைக்காரர்கள் திறக்க வந்திருந்தபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சென்னையில் இருந்த சுகுமாருக்கும், ராணிப்பேட்டை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திருட்டு நடைபெற்ற சுகுமாரின் வீட்டை ஆய்வு செய்தனர். வேலூரில் இருந்து தடயவியல் நிபுணர் பாரி மற்றும் குழுவினர் சம்பவம் நடைபெற்ற வீட்டை ஆய்வு செய்தனர்.
வேலூரில் இருந்து மோப்ப நாய் ‘சிம்பா' வரவழைக்கப்பட்டது. அது சுகுமார் வீட்டின் பின்புறமுள்ள எம்.பி.டி சாலை, வாணாபாடி சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுற்றியது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
வீட்டின் சுற்றுச்சுவரை தாண்டி குதித்த மர்ம நபர்கள் வீட்டின் முன் பக்க கதவை உடைக்க முயன்றுள்ளனர். அது முடியாததால் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த தங்க, வைர நகைகள் மற்றும் ரொக்கத்தை திருடி சென்றுள்ளனர். சுகுமாரின் வீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்தது. அதில் இருந்த ஹார்டு டிஸ்கையும் திருடி சென்றுள்ளனர்.
இதுகுறித்து சுகுமாரிடம் கேட்டபோது சுமார் ரூ.12 லட்சம் பெறுமான நகைகள் மற்றும் ரூ.38 லட்சம் ரொக்கம் திருட்டு போயிருக்கும் என்று தெரிவித்தார். இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் பணம் மற்றும் நகை கொள்ளை போயிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.