சோளிங்கர் லட்சுமி நரசிம்மசுவாமி கோவிலில் புரட்டாசி மாத பத்து நாள் நவராத்திரி உற்சவம் நடைபெற்றது. அதன் நிறைவு நாளான நேற்று விடியற்காலையில் நடை திறக்கப்பட்டு பக்தோசித பெருமாள், ஸ்ரீதேவி -பூதேவி சமேத அமிர்தவல்லி தாயாருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மாலையில், சிறப்பு பூஜை நடத்தி மலர் அலங்காரம் செய்யப்பட்டு தங்க கேடயத்தில் பக்தோசித பெருமாள் எழுந்தருளினார். கோவில் பிரகாரத்தில் மங்கள வாத்தியங்களுடன்‌ மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்து அருள் பாலித்தார். அப்போது, சிறப்பு மகாதீபாரதனை செய்யப்பட்டது, இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக மகா நவமியை முன்னிட்டு தொட்டாச்சியார் சுவாமி மாளிகையில் இருந்து தொட்டாச்சியார் குடும்பத்தாரை சிறப்பு மரியாதையுடன் நவராத்திரி நிறைவு நாள் உற்சவத்தில் கலந்து கொள்ள அழைத்து வந்தனர். இந்த நவராத்திரி உற்சவத்திற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ஜெயா, கண்காணிப்பாளர் விஜயன் ஆகியோர் செய்திருந்தனர்.