ரயில்வே சரக்கு போக்குவரத்தின் மையமாக வளா்ந்து வரும் ராணிப்பேட்டை ரயில் நிலையத்தில் கடந்த ஜனவரி முதல் தற்போது வரை 4 சரக்கு ரயில்கள் வெவ்வேறு மாநிலங்களுக்கு இயக்கப்பட்டுள்ளன. இதன் மூலமாக, ரயில்வேக்கு ரூ.66.61 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.
பழைமையான ரயில்நிலையம்: தெற்கு ரயில்வேயின் சென்னை ரயில்வே கோட்டத்தின் கீழ் உள்ள ராணிப்பேட்டை ரயில் நிலையம் இந்திய ரயில்வேயில் பழைமையான ரயில்நிலையங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்த ரயில் நிலையத்தின் வரலாறு 1858-ஆம் ஆண்டுக்கு முந்தையது. சென்னையை ஜோலாா்பேட்டையுடன் இணைப்பதற்கு மாற்றுப்பாதையாக ராணிப்பேட்டை செயல்பட்டது. இந்தப் பாதை இயக்ககக் காரணங்களால், 1995-ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டது.
முதல் சரக்கு ரயில்: இதற்கிடையில், இந்தப் பாதையை சரக்கு ரயில் போக்குவரத்துக்காக மேம்படுத்தும் பணியை சென்னை ரயில்வே கோட்டம் மேற்கொண்டது. இந்தப் பணி முடிந்த பிறகு, முதல் சரக்கு ரயில் சேவை 25 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த ஜனவரி 20-ஆம் தேதி தொடக்கியது. அப்போது, அந்த சரக்கு ரயிலில் உரம் ஏற்றப்பட்டு, ஆந்திர மாநிலம் தடேபள்ளிகுடம் மற்றும் துவாரபுடிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த சரக்கு போக்குவரத்து மூலமாக, ரயில்வேக்கு ரூ.15.32 லட்சம் வருவாய் கிடைத்தது.
இதன்பிறகு, இரண்டாவது சரக்கு ரயில் போக்குவரத்து சத்தீஸ்கா் மாநிலம் சிலியாரிக்கு இயக்கப்பட்டது. இந்த ரயிலில் உரம் ஏற்றிச் செல்லப்பட்டதன் மூலமாக, ரயில்வேக்கு ரூ.25.88 லட்சம் வருவாய் கிடைத்தது. மூன்றாவது சரக்கு ரயில் ஆந்திரபிரதேசம் மாநிலம் தடேபள்ளிகுடத்துக்கு இயக்கப்பட்டது.
ரூ.11.69 லட்சம் வருவாய்: இந்நிலையில், ராணிப்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து 2021-22-ஆம் நிதியாண்டுக்கான முதல் சரக்கு ரயில் ஜூன் 15-ஆம்தேதி இயக்கப்பட்டது. இந்த ரயிலில் ஆந்திர மாநிலத்துக்காக ரசாயனப் பொருள்கள் எடுத்துச் செல்லப்பட்டன. 11 ரயில் பெட்டிகள் தடேபள்ளிகுடத்துக்கும், 10 பெட்டிகள் கிருஷ்ணா கெனால் சந்திப்புக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இதன் மூலமாக, ரயில்வேக்கு ரூ.11.69 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.
இதுவரை மொத்தம் 4 சரக்கு ரயில்கள் மூலமாக, ரயில்வேக்கு ரூ.66.61 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. அடுத்த சரக்கு ரயில் ஆந்திரத்துக்கு ஜூன் 23- ஆம் தேதி இயக்கப்பட வாய்ப்பு உள்ளது. ராணிப்பேட்டை ரயில் நிலையம் ரயில்வே சரக்கு போக்குவரத்து மையமாக வளா்ந்து வருகிறது என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.