தமிழ்நாட்டில் கொரோனா 2-வது அலை பரவல் காரணமாக கடந்த மாதம் 10-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

ஆனால் தொற்று பாதிப்பு குறையாததையடுத்து பின்னர் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த ஊரடங்கு வருகிற 7-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தமிழகம் முழுவதும் மூன்று வாரங்களாக ஊரடங்கு அமலில் இருந்துள்ளது. ஆனால் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியாக சீரான தொற்று பாதிப்பு குறையவில்லை. இதனால் மாநிலம் முழுவதும் ஊரடங்கை தளர்த்துவது என்பது கடினமானது என்று நிபுணர் குழுவினர் பரிந்துரை செய்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. வெவ்வேறு மாவட்டங்களில் வெவ்வேறு காலத்தில் பாதிப்புகள் அதிகரித்து வருவதாக மருத்துவ நிபுணர் குழுவினர் சுட்டிக்காட்டி உள்ளனர்.

இதனால் வெவ்வேறு மாவட்டங்களில் தொற்று பாதிப்பில் வித்தியாசங்கள் நிலவுவதால் தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்வை படிப்படியாக அமல்படுத்தலாம். முதலில் தொற்று பாதிப்பு குறைந்துள்ள மாவட்டங்களில் தளர்வுகளை அறிவித்து திறக்கலாம். அதேவேளையில் கொரோனாவின் அடுத்த அலை மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்று நோய்களை கையாள மாவட்டங்கள் முழுவதும் படுக்கைகள் மற்றும் மனித வளங்களை அதிகரிக்க அரசு தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் என நிபுணர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கர்நாடக உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் நீட்டிக்கப்படும் என கூறப்படுகிறது. அதேநேரம் ஊரடங்கில் மீண்டும் தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு இன்று மாலைக்குள் வெளியாகும் என எதிர்ப்பாக்கப்படுகிறது.